search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் ராமதாஸ்"

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் அன்புமணி எதிர்க்காதது ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். #thirumavalavan #anbumani

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்?. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா?

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்சனையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்? அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மவுனம் காக்கிறாரா? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்?


    மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த ‘நாடக அரசியலை’ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #thirumavalavan #anbumani

    கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் நலன் சார்ந்த இந்த வி‌ஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் காவிரி உபரி நீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரைக்கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். அதற்காகத்தான் 110 கி.மீ பாயும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 கி.மீ இடைவெளியில் ஒரு தடுப்பணை வீதம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என 4.7.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    ஆனால், அதன்பின் 4 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பணைத் திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா அதன்பின் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தாலும், தமது அறிவிப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

    அவருக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டார்களே தவிர, இதுவரை தடுப்பணைக் கட்டுவதற்கான நிலங்களைக்கூட கையகப்படுத்தவில்லை. அதனால் தடுப்பணைக்கான திட்ட மதிப்பு ரூ.600 கோடியாக அதிகரித்துவிட்டது.

    கொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கொள்ளிடம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கொள்ளிடத்தில் தடுப்பணைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி வலியுறுத்தினர்.

    அதேபோல், கொள்ளிடம் கடலில் கலக்கும் முகத்து வாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைவதைத் தடுக்க முகத்துவாரம் அமைந்துள்ள அளக்குடியில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உழவர்களைத் திரட்டி பாமக பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், அவற்றுக்கு பயனில்லை.

    தமிழக அரசின் இந்த அலட்சியம் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500 கொள்முதல் விலை வழங்க வேண்டும், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்குடி, சிதம்பரம் வட்டங்களில் கடைமடை பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் அப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பொருந்தக் கூடியவை. எனவே, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் வரும் 20-ந்தேதி நடத்தும் சாலை மறியல் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை.


    சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட விரோதமாக குட்கா போதை பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.

    இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார்.

    ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் தான் கடைபிடிக்கின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது வீட்டில் வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன.

    இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறைதானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சி.பி.ஐ. தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புவி கண்காணிப்புக்கான ‘ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ செயற்கைகோள் உள்ளிட்ட 30 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவை பெருமைபடுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகலன் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். ஏவுகலன்களின் வேகத்திற்கு இணையான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளும் விண்ணைத் தொடுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதனின் உழைப்பை சுரண்டிக்கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதைவிட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்துவிட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர்கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.

    அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும், மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூகநீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். #ramadoss

    குறிஞ்சிப்பாடி:

    தமிழக அரசை அகற்றக்கோரி கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 17 பேர் முதல்-அமைச்சராக இருந்துள்ளார்கள். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஊழல் செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் மத்திய அரசுக்கு எப்போதாவது வளைந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய ஆட்சி அப்படி இல்லை. மிகவும் மோசமான ஆட்சி.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு பணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இந்த ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் மனம் மாற வேண்டும்.

    என்னை பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து இருக்கிறார். அவருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் பற்றி தெரியாது. இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று அவருக்கு தெரியாது. பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தின் போது 100 மரங்களை பொதுமக்களே வெட்டினார்கள்.

    குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் பஸ்களை உடைத்து இருக்கிறார்கள். அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரியாதா? இனி அவரை பற்றி பேச வேண்டாம்.

    நடிகர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சர்கார் என்ற படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

    இதே பழைய ராமதாசாக இருந்தால் அந்த படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். அந்த காட்சியில் நடித்ததற்காக நடிகரும், தயாரிப்பாளரும் சிகரெட் கம்பெனியிடம் காசு வாங்கி இருப்பார்கள், அதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    8 வழி பசுமை சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டை-சேலம் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இந்த அரசு ஒருநிமிடம் கூட ஆட்சி செய்ய தகுதி இல்லாத அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு போராடினேன். அப்போதே ஆலையை மூடி இருக்கலாம். இப்போது துப்பாக்கி சூடு நடந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

    அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ramadoss

    பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சி போன்றவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது வரவேற்கதக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. ஆனால் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.

    அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல்-டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த 19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.

    இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும்.

    இந்தியாவில் கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும்.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×